சமீபத்தில் வெளியான 'பார்ஸி' வெப் தொடர் பெரிய வரவேற்பை பெற்றது. கள்ளநோட்டு அச்சடிப்பது தொடர்பான இக்கதையில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த தொடரின் ஒரு காட்சியில் போலிஸாரிடம் சிக்காமல் இருக்க ஷாகித் கபூர் காரில் இருந்து கள்ளநோட்டுகளைச் சாலையில் வீசி தப்பித்துச் செல்வது போன்று இருக்கும்.
இந்த காட்சியைப் போன்றே இளைஞர் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்தபடி மாருதி காரில் இருந்து பணத்தைச் சாலையில் வீசும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதுபோன்ற சம்பவங்களால் சாலையில் பெரிய விபத்துகள் ஏற்படக்கூடும் என இந்த சம்பவத்திற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வீடியோ குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்த சம்பவம் நடந்தது என்று தெரியவந்தது. மேலும் பிரபல யூடியூபர்களான ஜோராவர் சிங், குர்ப்ரீத் சிங் ஆகிய இருவர்தான் இப்படி சாலையில் பணத்தை வீசியை போலிஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சமீபத்தில் வெளியான 'பார்ஸி' வெப்தொடரில் வரும் காட்சியை மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடவே இப்படி செய்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைதான ஜோராவர் சிங் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகியோரிடமிருந்து ரூபாய் நோட்டுக்களையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். யூடியூப் பிரபலங்கள் பலரும் படங்களில் இருக்கும் காட்சிகளை மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.