ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்திற்குட்பட்ட ஆத்மகூறு அருகே உள்ள நல்லமலை வனப்பகுதியை ஒட்டி வயல்வெளிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் 6ம் தேதி வயல்வெளிக்குச் சென்ற கிராம மக்கள் நான்கு புலிக்குட்டிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்குக் காரணம் பெண் புலி வயல்பகுதியில் குட்டியிட்டுள்ளது என கிராம மக்கள் அச்சமடைந்தனர். மேலும் தாய் புலி இங்குதான் எங்காவது அருகே இருக்கும் என நினைத்து புலிக்குட்டி அருகே செல்ல முதலில் தயக்கம் காட்டினர்.
பின்னர் தாய் புலி அங்கு இல்லாததைக் கிராம மக்கள் உறுதி செய்தனர். சில மணி நேரம் தாய் புலி வருகைக்காக அவர்கள் அங்கே காத்திருந்தனர். ஆனால் தாய் புலி வரவில்லை. இதையடுத்து பிறந்த சில நாட்களே ஆன 4 புலிக்குட்டிகளையும் தூக்கிக் கொண்டு கிராமத்திற்கு வந்தனர்.
பிறகு கிராமத்தில் ஒரு அறையில் நான்கு குட்டிகளையும் அடைத்து, இது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த வனத்துறையினர் புலிக்குட்டியை மீட்டு தாயிடம் ஒப்படைப்பதற்காகக் காட்டிக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் தாய் இருக்கும் இடம் தெரியாததால் புலிக்குட்டிகளை ஒப்படைப்பதில் வனத்துறைக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு மேல் புலிக்குட்டிகளின் தாய்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்துக் கூறும் வனத்துறை அதிகாரி, புலிக்குட்டிகளின் தாய் புலி எங்கு இருக்கும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு யோசனை உள்ளது. ஆனால் சரியான இடம் எங்களுக்குத் தெரியவில்லை. தாய் புலி வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த காலக்கெடு முடிந்துவிட்டது. அடுத்த என்ன செய்வது என்று வனத்துறை அதிகாரிகள் முடிவெடுக்கும்.
தாய், புலிக்குட்டிகளை தன்னுடன் வைத்திருக்கவில்லை என்றால் அனாதை அல்லது கைவிடப்பட்ட குட்டிகள் பாதுகாப்பது குறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி 4 குட்டிப் புலிகளும் பாதுகாக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், 4 குட்டிகளுக்கும் வழக்கமாக வழங்கப்படும் ராயல் கேனின் என்ற பூஜ்ஜிய சர்க்கரை உணவை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். மேலும் குட்டிகளை மிருகக்காட்சிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாயிடம் ஒப்படைக்க 4 புலிக்குட்டிகளுக்காக வனத்துறை அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.