இந்தியா முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆட்டோ, கார் டாக்கி சேவைகள் இருந்து வருகிறது. இருப்பினும் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில் கார் டாக்சி சேவைகளைப் போன்று ரேபிடோ இருசக்கர வாகன சேவைகளும் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் இளைஞர்கள் பலர் இந்த ரேபிடோ சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஒலா, உபர், ரேபிடோ போன்ற தனியார் சேவைகள் வந்த பிறகு ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோஒட்டுநர்கள் கூறிவருகின்றனர்.
இதனால் ஆட்டோ தொழிற்சங்கங்கள் இந்த சேவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனல் காரணமாக டெல்லியில் கூட ஒலா, உபர் போன்ற சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் ரேபிடோ பைக் ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தாக்கும் வீடியோவை இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ரேபிடடோ பைக் ஓட்டுநரின் ஹெல்மெட்டை ஆவேசமாகத் தரையில் தூக்கி வீசிவிட்டு, அவரை அடிப்பதுபோல் கையை ஓங்குகிறார்.
பின்னர், 'நண்பர்களே இவர் வேறு நாட்டில் இருந்து வந்து அங்கே ரேபிடோ ஓட்டிக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார். ஆட்டோமொமைல் துறை எந்த அளவுக்கு ஊழலில் தவிக்கிறது என்பதை பாருங்கள்' என பேசுகிறார். இந்த வீடியோவை வைரலானதை அடுத்து போலிஸார் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு பலரும் வெவ்வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக இப்படி வேலை செய்து வருபவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் பொய்யான வீடியோக்களையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதை உண்மை என நம்பி சிலர் வெளிமாநிலங்களில் இருந்து வேலைபார்த்து வருபவர்களை அம்மாநில மக்கள் தாக்க முயற்சிக்கின்றனர்.
அண்மையில் கூட தமிழ்நாட்டில் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கூறி பீகாரைச் சேர்ந்த பா.ஜ.கவினர் பொய்யான ஒரு வீடியோவை பரப்பினர். இப்படி பா.ஜ.கவினர் இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை பரப்ப பார்க்கிறார்கள். இதன்விளைவுதான் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ரேபிடோ ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர் தாக்க முற்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.