உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடியதாக பாராகிளைடிங் சாகசம் இருந்து வருகிறது. இந்தசாகசம் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் இதைச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.
உலகம் முழுவதும் மலைப் பகுதியில் பாராகிளைடிங் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கேரளாவில் உள்ள பாபநாசம் கடற்கரையிலும் பாராகிளைடிங் செய்வதற்கான இடம் உள்ளது.
இங்கு சுற்றுலாவந்த இரண்டு பயணிகள் பாராகிளைடிங் செய்யத் திட்டமிட்டனர். இதன்படி உதவியாளருடன் பாராசூட் அணிந்து கொண்டு பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தரையிறங்கும் போது 50அடி உயர மின் கம்பத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதனால் இருவரும் கீழே விழாமல் இருக்க மின்கம்பத்தைப் பிடித்துக் கொண்டுள்ளனர். இப்படிக் கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை மின்கம்பத்தில் அவர்கள் இருவரும் தொங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும், போலிஸாரும் இருவரையும் கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமா மீட்டுள்ளனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் ஒரேநாளில் குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.