கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இப்டி பாஜக தொடர் சர்ச்சையில் சிக்க சமீபத்தில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ மதல் விருப்பக்ஷாவின் மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியுள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருப்பக்ஷா. இவர் கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவரின் மகன் பிரசாந்த் மதல் பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB)தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர் தந்தை சார்பில், கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் டெண்டர் வழங்க ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தா போலிஸார் அவரை அதிரடியாக கைதுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரின் தந்தையான எம்.எல்.ஏ விருப்பக்ஷா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருப்பக்ஷா தலைமறைவானார். அதோடு அவர் சார்பில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்த நிலையில், இன்று தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு ஏராளமான பாஜகவினர் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை நோக்கி விருப்பக்ஷா சிரித்துக் கொண்டே கை அசைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஊழல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு பாஜக இந்த அளவு ஆதரவு கொடுப்பது ஊழலுக்கு துணைபோவது போலத்தான் என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.