பொதுவாக திருமணம் போன்ற நிகழ்வுகள் என்றாலே பெண்கள் தங்களை அலங்கார படுத்திக்கொள்ள எண்ணுவர். குறிப்பாக திருமணத்தின்போது பியூட்டி பார்லர் போய் மேக் அப் போட்டுக்கொள்வர். அவ்வாறு மேக் அப் போடுபவர்கள் தங்களை திருமண நிகழ்வில் அழகாக காட்டிக்கொள்ள எண்ணியே அதனை செய்வர். ஆனால் தற்போது அவ்வாறு மேக் அப் போட்ட இளம்பெண்ணின் திருமணம் நின்றுபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் உள்ள அரிசிகரே என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் கடந்த 2-ம் தேதி நடைபெற இருந்தது.
இதனால் திருமணம் நாளுக்கு நாள் நெருங்க, தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்த பெண் பியூட்டி பார்லர் செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரிசிகரே டவுனில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்திற்கு மேக்-அப் போட்டுக்கொள்ள சென்றுள்ளார்.
அப்போது அங்கே தனக்கு இந்த பெண் மேக் அப் போட்டுவிட சொல்ல, அவரது முகத்தில் புது கிரீம் ஒன்றை பூசி, பவுன்டேஷன் மேக் அப் போட்டுவிட்டுள்ளார். பின்னர் 'ஸ்டீம்' என்று சொல்லப்படும் சுடுநீராவியில், அவரது முகத்தை காட்டும்படி கூறியுள்ளார். அந்த பெண்ணும் சூடு சுடுநீராவியில் தனது முகத்தை காட்டியுள்ளார்.
ஸ்டீம் எடுத்த சில நிமிடங்களில் மணப்பெண்ணின் முகம் வெந்து காணப்பட்டுள்ளது. மேலும் அவரது முகம் கருமை நிறத்தில் காணப்பட்டு கண்கள் அனைத்தும் தேனீ கடித்தது போல் வீக்கம் பெற்றது. இதனால் அதிர்ச்சியைடந்த மணப்பெண், மற்றும் அவரது உறவினருக்கு செய்வதறியாது திகைத்தனர். மேலும் இது தற்போது வரை சரியாகாத நிலையில் இருந்ததால், பெண்ணை கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.
அதோடு தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என மாப்பிள்ளை தெரிவிக்கவே திருமணமும் நின்று போனது. இதனால் வேதனையில் இருக்கும் பெண்ணின் வீட்டார் இந்த சம்பவம் குறித்து அந்த அழகு நிலையத்தின் மேல் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்துக்காக மேக்கப் போட்ட இளம் பெண்ணின் முகம் வீக்கம் பெற்று, கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்றுபோன சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.