இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை மசோதாவையும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்ததால், அது காலாவதியும் ஆனது.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து காணப்படுகிறது. இதற்காக பலரும் கடன் வாங்கி விளையாடி வருகின்றனர். இதில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை எண்ணி பார்க்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். தொடர்ந்து இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
செங்கல்பட்டு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் கோபால் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (35). மருத்துவ பிரதிநிதி வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
அவர் குடும்ப வறுமை காரணமாக, ஆன்லைன் சூதட்டத்தை தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் அதற்காக போதிய பணம் இல்லாத நிலையில் அதற்காக வேறு ஒரு விஷயத்தையும் செய்து வந்துள்ளார்.
அதாவது லோன் ஆப் என்று சொல்லப்படும் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார். இவ்வாறு அவர் சில கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார். இருப்பினும் அவர் விளையாட்டில் வெற்றி பெறவில்லை. இதனால் அவர் ரூ.20 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார்.
ஒரு பக்கம் தொடர் தோல்வி, மறுபக்கம் கடன் செயலியில் இருந்து பணம் கேட்டு நெருக்கடி.. இதனால் கடுமயான மன உளைச்சலில் தள்ளப்பட்டார். தொடர்ந்து அவர் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை அவரது மனைவி வெளியில் சென்ற நேரத்தில், மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மனைவி கதவை பலரும் முறை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது வினோத் குமார் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த சேலையூர் அதிகாரிகள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட வினோத்குமாரின் வீட்டுக்கு சென்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வினோத்குமார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !