இந்தியாவில் தினசரி வேலைகளில் ஈடுபடும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புஹைதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தற்போது ஆந்திராவில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வேடபாலம் மண்டலத்திற்குட்பட்ட பாலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வீரபாபு. இவர் வழக்கம்போல் வகுப்பறையில் மாணவர்களுக்கு நாற்காலியில் அமர்ந்தபடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் பேச்சு மூச்சு இல்லாமல் அப்படியே நாற்காலியில் கவிழ்ந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்ற ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். பிறகு ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். பிறகு அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீரபாபுவின் நாடித் துடிப்பைச் சரிபார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதைக்கேட்டு சக ஆசிரியர்களும், மாணவர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் ஆறுபேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.