ஹைதராபாத் மல்காஜ்கிரி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் யாதவ். பேராசிரியரான இவர் கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் தினமும் வேலை முடித்து விட்டு நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட், பேட்மிண்டன் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஷியாம் யாதவ் சுருண்டு விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவர் மூச்சு விடுகிறாரா என பார்த்துள்ளனர். அவர் மூச்சு விடாததை அடுத்து மருத்துவமனைக்குக் தூக்கிக் கொண்டு சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பால் அவர் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 5 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் திருமண நிகழ்ச்சியின் போது நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் ஹைதராபாத்தில் ஹல்தி விழாவில் பங்கேற்ற ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மேலும் ஜம்மில் உடற்பயிற்சியின் போது 24 வயது போலிஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பு காரணமாக இறந்தார்.
அதேபோல் தொழிலாளி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது பேட்மிண்டன் விளையாடும் போது பேராசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து மாரடைப்பு காரணமாக மட்டும் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.