திரிபுரா மாநிலத்தில் கடந்த 16ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 60 தொகுதிகள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களில் முன்னிலையிலும், திமோக 10 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. தற்போது வெளியாகும் முடிவுகள்படி பா.ஜ.க மீண்டும் திரிபுராவில் ஆட்சியமைக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்தில் 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 36 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும், என்.பி.எப் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். நாகாலாந்திலும் பா.ஜ.க கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.
60 தொகுதிகளுக்கு நடைபெற்ற மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பா.ஜ.க 5 தொகுதிகளில் முன்னிலை பெற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது. திரிணாமுல் 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேநேரம் மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த 3 மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பா.ஜ.க பிடிக்க உள்ளது. மேகாலயாவில் பா.ஜ.க கூட்டணி வைத்து அல்லது வெற்றி வெறும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.