சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி, அக்கட்சியின் தலைவர் கமல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்.பி உட்பட பல முக்கிய தலைவர்களும், மாநில தலைவர்கள் என பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, 52 வயதாகும் எனக்கு இப்போதும் சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது என உருக்கமாகப் பேசியுள்ளார்.
இது குறித்து மேலும் ராகுல் காந்தி பேசியது வருமாறு:-
1997 தேர்தலுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறுவதற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது நான் தாயாரிடம் என்ன நடக்கிறது என்று கேட்டேன்.
அதற்கு அவர் நாம் வீட்டை காலி செய்ய இருக்கிறோம். அப்போது நான் ஏன் நம்முடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என கேட்டேன். அப்போதுதான் தாயார் இது நம்முடைய வீடு இல்லை. இது அரசுக்குச் சொந்தமான வீடு என்று கூறினார்.
அடுத்து நாம் எங்கே செல்ல இருக்கிறோம் என்று கேட்டேன். அதற்கு அவர் தெரியாது என்று பதிலளித்தார். இப்போது எனக்கு 52 வயதாகிறது. இன்னும் எனகு சொந்தமாக வீடு இல்லை. அலகாபாத்தில் நாங்கள் தங்கியிருக்கும் வீடும் எங்களுடைய வீடு அல்ல.
அதனால் தான், நான் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கியபோது என் பொறுப்பு என்ன என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இந்த பயணத்தில் நான் பயன்படுத்தும் 20 முதல் 25 அடி பரப்பளவு அலுவலகம் தான் அடுத்த சில மாதங்களுக்கு என்னுடைய வீடாக இருக்கப்போகிறது என்று.
இந்த வீட்டிற்குள் ஏழை, பணக்காரர், இளைஞர், முதியவர், சாதி, மதம், இனம் என எதுவாக இருந்தாலும் சரி ஏன் விலங்குகளாக இருந்தாலும் சரி அனைவருக்குமான வீடாக இது இருக்க வேண்டும் என்று கருதினேன்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஆனால் ராகுல் காந்தியின் இந்த உருக்கமான பேச்சை பா.ஜ.கவினர் கிண்டல் செய்து வருகின்றனர். தான் பயன்படுத்தும் வீடு, கார் என அனைத்தும் தனக்கே சொந்தம் என்ற எண்ணத்துக்கு ராகுல் காந்தி பழக்கப்பட்டுவிட்டார் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பத் பத்ரா தெரிவித்துள்ளார்.