உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியை சேர்ந்தவர் இலியாஸ் - அஞ்சுகம் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே அஞ்சுகத்தை அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பல ஆண்டுகளாக வரதட்சணை கொடுக்காமல் இருப்பதாக கூறி தினம் தினம் அஞ்சுகத்தை அவர் மனதளவில் காயப்படுத்தியுள்ளார். இப்படியே தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துள்ளது. அதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து 2.5 லட்சம் பணமும், காரும் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வருமாறு கூறி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
இதில் மனம் நொந்துபோன அஞ்சுகம், தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தனக்கு நடக்கும் கொடுமைகளை கண்ணீருடன் கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார். இருப்பினும் அஞ்சுகத்தின் பெற்றோர் வேறு வழியின்றி தங்கள் மகளை சமாதானம் செய்து மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டில் இருந்து எதுவும் வாங்கி வரவில்லை என்ற ஆத்திரத்தில் மாமியார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அதோடு அவரை வீட்டில் இருந்த ஆசிட்டை குடிக்க வற்புறுத்தியுள்ளார். குடிக்க மறுப்பு தெரிவித்தபோதும், வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்துள்ளார். இதில் அவரது வயிறு எரிந்து துடிதுடித்து அலறியுள்ளார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அஞ்சகத்தின் பெற்றோரும் மாமியார் குடும்பத்தார் மீது புகார் அளித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட அஞ்சுகத்திடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை அஞ்சுகம் கண்ணீரோடு தெரிவித்தார். இதையடுத்து மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அஞ்சும் அண்மையில் உயிரிழந்தார்.
இதையடுத்து மாமியார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அஞ்சகத்தின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால் மருமகள் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள மாமியாரின் கொடூர செயல் உபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.