ஒடிசா மாநிலம் கியோஜ்ஹர் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் பெரும்பாலாக வாழ்கின்றனர். இங்கே இருக்கும் ரபி - ஜானகி தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி மறு வருடமே அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த சில மாதங்களிலே ஜானகி மீண்டும் கர்ப்பம் தரித்தார். இப்படி சுமார் 11 ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பெற்று வந்துள்ளார் ஜானகி. இதில் ஒரு குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. இருப்பினும் மனசாட்சி இல்லாமல், ஜானகியை மேலும் குழந்தைகள் பெற வைத்துள்ளார் ரபி. இப்படி தொடர்ந்து நடைபெற்றதால் ஜானகியின் உடல்நிலை பாதிப்புகுள்ளாகியுள்ளது.
இருப்பினும் அதனை பொருட்படுத்தாத கணவர், தனது விருப்பத்திற்கு ஏற்றார் போல் தனது மனைவி நடக்கவேண்டும் என கட்டாய படுத்தியுள்ளார். ஜானகி தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை அறிந்த உள்ளூர் `ASHA' (Association for Social and Health Advancement) பணியாளர்கள், அவரை குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ஜானகியும் தனது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் எதுவும் தெரிவிக்காமல், குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்துள்ளார். இதை அறிந்த ஜானகியின் கணவர் ரபி, அவர் மீது கோபப்பட்டுள்ளார். மேலும் தன்னிடம் கேட்காமல், எதற்கு இப்படி செய்தாய் என்று கூறி வீட்டை விட்டு, அவரது சில குழந்தைகளுடன் வெளியே துரத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஜானகி கூறுகையில், “திருமணமான 11 வருடங்களில் நான் 11 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளேன். எனது குழந்தையில் ஒன்று இறந்துவிட்டது. எனது குழந்தைகள் வளரும் போது ஒவ்வொரு வருடமும் கர்ப்பமாக இருப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. எங்கள் கிராமத்து பெண்கள் பலர் அறுவை சிகிச்சைக்கு சென்றிருந்தாலும், என் கணவருக்கு புரியவில்லை. அவர் தற்போது என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்” என்று அழுதுகொண்டே கூறினார்.
மேலும் இதுகுறித்து ஆஷா அமைப்பு கூறுகையில், "ஜானகி, தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்து வருவதால் அவர் உடலளவில் மிகவும் பலவீனமாக மாறிவிட்டார். இவர்களால் இந்த குழந்தைகளை பராமரிக்க இயலவில்லை. ரபிக்கு குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லை. இதை கூறினால், அவரால் புரிந்துகொள்ளவும் இயலவில்லை" என்றது.
தொடர்ந்து ஜானகியின் கணவர் ரபி கூறுகையில், "என் மனைவி குற்றச்செயல் புரிந்துள்ளார். என் சமூகத்தில் யாரும் இப்படி செய்ததில்லை. எங்கள் சமூகத்தில், பெண்கள் இப்படி செய்தால், எங்கள் முன்னோர்களுக்கு தண்ணீர்கூட கிடைக்காதென்ற ஐதீகம் உள்ளது. அதனால் இந்த மாதிரி ஆபரேஷனுக்கு எதிராக நிற்கிறேன்" என்றார்.
தற்போது ஜானகியை ரபியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் முயன்று வருகின்றனர். அதோடு ரபிக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை குறித்த விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11 வருடங்களில் 11 குழந்தைகள் பெற்றெடுத்த பெண், குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொண்டதால் அவரை அவரது கணவர் வீட்டை விட்டு துரத்தியுள்ள சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.