மேற்குவங்க மாநிலத்தில் பள்ளிகளில் வழங்கும் மதிய உணவில் வாரத்திற்கு ஒரு முறை அசைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஒருநாள் மதிய உணவை மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இறைச்சி உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு வந்த சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொல்கத்தாவின் மால்டா மாவட்டத்திற்குட்பட்ட இங்கிலீஷ் பஜார் வீதியில் அம்ரிதி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கோழிக்கறி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வாரத்தின் ஒவ்வொரு முறையும் கோழிக்கறி வழங்கும்போது அதை ஆசிரியர்களே சாப்பிட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, கோழியின் கல்லீரல், வயிறு ஆகிய நல்ல கறித்துண்டுகளை ஆசிரியர்கள் எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளை மாணவர்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் பலருக்கும் கோழிக்கறி கிடைப்பதில்லை. மேலும் ஆசியர்கள் கறித்துண்டுகளை எடுத்துக் கொண்டு தாங்களே தனித்தனியாகவும் சமைத்தும் சாப்பிட்டு வந்துள்ளனர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை புகார் தெரிவித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அண்மையில் கோழிக்கறி வழங்கும்போது ஆசிரியர்கள் வழக்கம்போல் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் மீண்டும் ஏமாற்றம் அடைந்த மாணவர்கள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பிறகு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் இது பற்றி முறையிட்டுள்ளனர். அப்போது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் பெற்றோர்கள் ஆறு ஆசிரியர்களை ஒன்றாக வகுப்பறை ஒன்றில் பூட்டி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆசிரியர்கள் பூட்டிய அறையில் இருந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பெற்றோர்களிடம் சமாதானம் பேசி ஆசிரியர்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.