பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜகாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்கா யாதவ். இளைஞரான இவருக்கு விரை வீக்கப் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து செயின்பூர் அரசு மருத்துவமனையில் விரை வீக்க அறுவை சிகிச்சைக்காக இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிறகு அவரிடம் 'உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டடு' என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் மன்கா யாதவ். 'விரை வீக்க அறுவை சிகிச்சைதானே எனக்கு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தீர்கள்' என மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார்.மேலும், 'திருமணமே நடக்காத எனக்கு இனி எப்படி கல்யாணம் நடக்கும்' என மருத்துவர்களுடன் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆனால், மன்கா யாதவுக்கு இரண்டு முறை திருமணம் நடந்துவிட்டது என்றும் அவரது மனைவிகள் இருவரும் பிரிந்துவிட்டனர் என்றும், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை விண்ணப்பத்தில் அவர்தான் கையெழுத்திட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்திற்குள் விசாரணை அறிக்கை கொடுக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எப்படி மருத்துவர்கள் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.