பொதுவாக பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் பல இன்னல்களை தாண்டி வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று கனவோடு பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் மூலம் படிக்க வருவர். அவ்வாறு படிக்கும் மாணவர்களை அங்கிருக்கும் சில சக மாணவர்கள், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொல்லை கொடுப்பர்.
மேலும் அவர்களை சாதிய ரீதியாக துன்புறுத்தவும் செய்வர். இதுபோன்ற நிகழ்வு பல பகுதிகளில் நடைபெற்றாலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐஐடி-யில் அதிகமாகவே காணப்படும். இந்தியாவில் ஐஐடி நிறுவனங்கள், மும்பை, சென்னை, கான்பூர், டெல்லி, அகமதாபாத் என 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது.
இந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் கனவோடு பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருவர். நெடுந்தூரத்தில் இருந்து கல்வி கற்க வரும் மாணவ - மாணவியருக்கு அங்கேயே விடுதி வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மும்பையிலும் இதுபோல் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கே படிக்கும் மாணவர்கள் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல் நடப்பதாக அடிக்கடி குற்றசாட்டுகள் வரும். மேலும் ஆசிரியர் செய்யும் இதுபோன்ற செயல்களால், பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் மனம் நொந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர். அதோடு சில மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து போகின்றனர். அந்த வகையில் தற்போது முதலாமாண்டு படிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). பட்டியலினத்தை சேர்ந்த இவர், இட ஒதுக்கீடு முறையால் மும்பை ஐஐடியில் பி.டெக்படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்வி நிறுவனத்தில் சேர்ந்த இவர், அங்கிருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்தார்.
இதில் இவரது தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சக மாணவர்கள் நிர்வாகத்திடம் தெரிவிக்கவே, காவல்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர், தர்ஷன் சாதி ரீதியான கொடுமையில்தான் உயிரிழந்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் தர்ஷனிடம் பேராசிரியர்களும், பல மாணவர்கள் ஜாதி பாகுபாடு காட்டியதாகவும் குற்றம்சாட்டினர். ஐஐடி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தர்ஷனின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது தர்ஷன் குறித்து அவரது சகோதரி செய்தியாளர்களிடம் கூறினார். இது க்ருய்து பேசிய அவர், "போன முறை தர்ஷன் வீட்டிற்கு வந்திருக்கும்போது, ஐஐடியில் தன்னை சாதி ரீதியாக தள்ளி வைப்பதாக கூறினான். அதோடு அவரது நண்பர்கள், விடுதியிலுள்ள நண்பர்கள் யாரும் அவருடன் பேசவில்லை என்றும் சொன்னான்.
நாங்களும் இது விரைவில் சரி ஆகி விடும் என்று ஆறுதல் கூறி அனுப்பினோம். ஆனால் அவன் இவ்வாறு ஒரு முடிவு எடுப்பான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை" என்று அழுதுகொண்டே கூறினார்.
தொடர்ந்து தர்ஷனின் தந்தை பேசுகையில், "இட ஒதுக்கீட்டால்தான் தர்ஷன் படிக்கிறான் என்று தெரிந்ததுமே, அவனுடன் சக மாணவர்கள் பேசுவதை தவிர்த்து விட்டனர். நாங்கள் பல ஆயிரம் ரூபாய் கட்டி படிக்கும் போது, நீ மட்டும் இலவசமாக படிப்பாயா என கேட்டு அவனை பல முறை திட்டி மன கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது போன்ற ஆட்களால்தான் எனது மகன் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளான். அவனது மரணத்துக்கு இவர்கள்தான் காரணம்" என்று கண்ணீருடன் கூறினார்.