பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களின் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கான்பூரில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இழந்த தாய் - மகள், அதிகாரிகள் கண்முன்னே தீக்குளித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரமிலா திக்சிட் என்ற பெண்ணின் குடும்பத்தினரின் குடியிருப்பை அகற்றிய அதிகாரிகள், அவர்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறு அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. செய்வதறியாது தவித்த பிரமிலா திக்சிட், தனது 20 வயது மகள் நேஹாவுடன் அதிகாரிகள் கண்முன்னே தீ வைத்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது போலிஸார்தான் அவர்களது குடிசைக்கு தீ வைத்தாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இருந்த போலிஸார்மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் போலிஸாருக்கும் இடையே பதற்றம் நிலவியது.
இந்த சம்பவத்தில் அரசு அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இடித்ததால், வேதனையடைந்த தாய் - மகள், தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.