உலக அளவில் பிப்ரவரி 14-ம் தேதியைக் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்றைய தினத்தைப் பசு அணைப்பு தினமாகக் கொண்டாடுமாறு விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பிற்கு இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் விலங்குகள் நலவாரியத்தின் அறிவிப்பை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் கேலிச்சித்திரங்களைப் பதிவிட்டு வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பசு அணைப்பு தின அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
அதேபோல் அதானி குழும நிறுவனம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி வாய் திறக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். மேலும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அதானி முறைகேடு குறித்துப் பேசியும், பிரதமர் மோடி பேசும் போது அதானி என்ற வார்த்தையைக் கூட பேசாமல் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் விலங்குகள் நல வாரிய முடிவுடன், தொழில் அதிபர் கவுதம் அதானி விவகாரத்தை ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா விமர்சித்து உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான 'சாம்னா' வெளியிட்டுள்ள கட்டுரையில், அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. ஆனால் அவர்களின் அரசு, பசு மாடு பற்றி பேசுகிறது. அதானி பங்குச் சந்தையின் பெரிய எருது. ஆனால் மோடிக்கு அவர் புனிதமான பசு. பிரதமர் அதனை தழுவிக் கொண்டுள்ளார். அதன் பிடியைத் தளர்த்த அவர் தயாராகவில்லை" என கடுமையாக விமர்சித்துள்ளது.