மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தற்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டது. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பா.ஜ.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விளக்கி 'விகாஸ் ரத யாத்திரை' ஒன்றை ஆளும் கட்சியான பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. ஆனால் பா.ஜ.கவின் இந்த யாத்திரைக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பா.ஜ.க தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எங்களுக்காக எந்த திட்டத்தையும் நீங்கள் கொண்டு வரவில்லை. உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என கடும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முங்காலி சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க அமைச்சர் பிரஜோந்திர சிங் விகாஸ் ரத யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் அருகே வந்து அரிப்பு கொடியை தூவிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் உடலில் அரிப்பு தாங்காமல் தனது உடையைக் கழற்றி பாட்டில் தண்ணீரை எடுத்துக் கழுவிக்கொண்டார். இது தொடர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோன்று கந்த்வா மாவட்டத்தில் யாத்திரை செய்த சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர வர்மாவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். "3 கி.மீ தூரத்திற்குக் கூட சாலை போட முடியாத நீங்கள் எதற்கு விகாஸ் ரத யாத்திரை நடத்துகிறீர்கள்" என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
இப்படி பா.ஜ.க தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.