ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலை போற்றும் விதமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தினம், அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு மிக்க ஒரு தினமாக கருதப்படுகிறது.
காதல் இன்றி உலகம் இயங்காது என பெரிய பெரிய கவிஞர்கள், தத்துவ மேதைகள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் காதலை அனைவரும் வரவேற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொண்டாப்படும் இந்த தினம் இந்தியாவிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்துத்துவ கும்பல் மட்டும் இதற்கு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக RSS, பஜ்ரங் தல் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்கள், மும்பை உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த தினத்தன்று பொதுவெளியில் ஒரு ஆணும், பெண்ணும் சுற்றித் திரிந்தால் அவர்களை மன ரீதியாக கொடுமை செய்வர்.
மேலும் அவர்கள் யார் என்ன என்று விசாரணை செய்து, அண்ணன் - தங்கையாக இருந்தால் 'ராக்கி' கயிறு கட்டவேண்டும், அல்லது தாலி கட்டி குங்குமம் வைக்க வேண்டும் என்று சொல்லி துன்புறுத்துவர். இவர்களது இந்த செயல் தமிழ்நாடு, கேரளா என சில மாநிலங்களில் மட்டும் செல்லுபடி ஆகாது.
இவர்கள் தொடர் எதிர்ப்பு பிரசாரம் பலனளிக்கவில்லை என்று மாற்றாக ஒரு குறுக்கு புத்தியுடன் செயல்பட்டு பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்துக்கு போட்டியாக, மாடுகள் கட்டிப்பிடி தினமாக மாற்ற வேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் "இந்திய கலாச்சாரம், கிராமப்புற பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day தினமாக கொண்டாட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒன்றிய அரசின் இந்த கோணலான புத்திக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் இது குறித்து பல்வேறு மீம்கள் போன்றவை செய்து நெட்டிசன்களும் கிண்டலடித்து வந்தனர். அதோடு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்.பி., "பாஜகவினருக்கு அதானிதானே புனிதப் பசு. ஆகையால் பாஜகவினர் புனிதப் பசுவாகிய அதானியை அரவணைத்துள்ளனர்" என கிண்டலும் அடித்தார்.
மாடுகளை வைத்து அரசியல் செய்வது பாஜகவினருக்கு வழக்கமான ஒன்றுதான்; ஆனால் காதலர் தினத்திலும் இவ்வாறு செய்தது கண்டனத்திற்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து எதிர்ப்புகளும், கிண்டல்களும், விமர்சனங்களும் கிளம்பிய நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி Cow Hug Day என்ற அறிவிப்பை இன்று வாபஸ் பெற்றது விலங்குகள் நலவாரியம். இது தற்போது பெரும் பேசுப் பொருளாக மாறியுள்ளது.