கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அங்குள்ள லிங்கசுகுர் நகரில் உள்ள சார் எம்.விஸ்வேஸ்வரய்யா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக இவர் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்துள்ளார்.
இவர் கடந்த 3ம் தேதி இரவு விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். காலையில் இதனைக் கண்ட சக மாணவிகள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மாணவி இறப்பில் மர்மம் இருப்பதால் அவரின் உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கல்லூரியின் முதல்வர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே அந்த கல்லூரி முதல்வரும், விடுதி வார்டானுமான ரமேஷ் தலைமறைவானது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
பின்னர் அவரின் மொபைல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவியை மிரட்டி ஒருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும். பின்னர் இது தொடர்ச்சியாக நடைபெற்றுவந்ததும் தெரியவந்தது. இந்த சூழலில் மாணவி வேறு கல்லூரி மாறுவது தெரியவந்த நிலையில், தான் மாட்டிவிடுவோமோ என்ற அச்சத்தில் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலைசெய்து தற்கொலை போல மாற்ற தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் அவரால் வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.