கர்நாடக மாநில பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ளது விமான படை தளம். இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியானது 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதம் இந்த கண்காட்சி 'ஏரோ இந்தியா' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள், இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளது. விமான கண்காட்சியை ஒட்டி போர் விமானங்களின் சாகச காட்சிகளும் இடம்பெறும். அந்த வகையில் இறுதியாக 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு நடைபெறும் இந்த கண்காட்சியானது பிப்ரவரி 13 தொடங்கி 17 வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டு நடைபெறவிருக்கும் விமான கண்காட்சியில் சுமார் 633 இந்திய நிறுவனங்கள் மற்றும் 98 வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 731 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
இதனால் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நடைபெறும் விமானக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதனால் விமான கண்காட்சியின்போது எந்த வித அசம்பாவிதங்களும், இடையூறுகளும் ஏற்படாதவண்ணமாக இருக்க பல முக்கிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த நிலையில், 13 முதல் 17 வரை, 5 நாட்கள் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா விமான கண்காட்சி காரணமாக பெங்களூரு எலகங்கா விமான படை தளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றளவிற்கு உள்ள இடங்களில் இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது அந்த 10 கி.மீட்டர் சுற்றளவிற்கு உள்ள இறைச்சிக்கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உள்ளிட்ட அனைத்திற்கும் அசைவ உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கண்காட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே (ஜனவரி 30) தொடங்கப்பட்டு நடந்து முடிந்த பின்பும் 3 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.
இந்த தடையை மீறி செயல்பட்டால் இந்திய விமானப்படை விதி 1937 மற்றும் பிபிஎம்பி சட்டம் 2020 கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் மீதமாகும் உணவு பொருட்கள் பொது இடங்களில் கொட்டப்படுவதால், அதனை உண்ண பறவைகள் அதிக அளவில் வருகிறது.
இதனால், விமான கண்காட்சியின் போது அந்த பறவை விமானத்துடன் மோதுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே அசைவ உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்ட விளக்க அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மற்றும் அசைவ உணவு பிரியர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.