உத்தர பிரதேச மாநிலம், சந்தவுசி ரயில் நிலையத்தில் 32 வயது பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகனுடன் காத்திருந்தார். பிறகு அங்கு வந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது அந்த பெட்டிக்குவந்த டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் என்பவர் அவரிடம், "இங்கு ஏன் நிற்கிறாய், வா ஏ.சி பெட்டிக்கு போகலாம்" என கூறியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு டிக்கெட் பரிசோதகரை நன்றாக தெரியும் என்பதால் அவர் கூப்பிட்டவுடன் ஏ.சி பெட்டிக்கு சென்றுள்ளார். பிறகு அங்கு டிக்கெட் பரிசோதகரின் நண்பர் என கூறி மற்றொருவர் வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் குடித்த தண்ணீர் கொடுத்துள்ளனர்.
இதைக் குடித்த உடனே அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்துள்ளது. பிறகு அவருடன் இருந்த குழந்தையைப் பக்கத்துப் படுக்கையில் அமரவைத்துள்ளனர். இதையடுத்து டிக்கெட் பரிசோதகரும், அவரது நண்பரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவரது ஆடை களைந்து இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தாம் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பற்றி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து ரயில்வே போலிஸார் டிக்கெட் பரிசோதகரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங்கை இடைநீக்கம் செய்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலிஸார் தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.