மஹராஷ்டிர மாநிலம் மும்பையின் விக்ரோலி பார்க்சைட் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தின்போது அவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.
அதன்படி போலிஸார் மாணவியின் மொபைல் போன் சிக்னல் மூலம் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அவர் தாதர் என்ற ரயில் நிலையத்தில் கடைசியாக இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலிஸார் அந்த பெண் ஒரு தம்பதியோடு ரயிலில் ஏறி செல்வதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து ரயில் நிற்கும் ரயில் நிலையங்களில் அவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் மிரஜ் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கியது தெரிவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த வாகன எண்ணை வைத்து அந்த வாகனம் சுதா மனோஜ் ஜோஷி என்பவருக்கு சொந்தமானது என்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் சுதா மனோஜ் ஜோஷியிடம் விசாரணை நடத்தியபோது அந்த சிறுமியை கூட்டி சென்றது அவரின் மனைவி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களின் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் அவுரங்காபாத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலிஸார் அந்த சிறுமியை அங்கிருந்து மீட்டு அவரோடு இருந்த இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் அந்த இருவரும் அந்த பெண்ணை கண்பத் காம்ப்ளே (50 வயது) என்பவர் திருமணம் செய்ய 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமி மைனர் என்று தெரிந்தும் கண்பத் காம்ப்ளே என்பவர் சிறுமியை கோயிலில் வைத்து திருமணம் செய்ததும் தெரியவந்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில் திருமணம் செய்ய பெண் கிடைக்காததால் காசு கொடுத்து வாங்கி திருமணம் செய்ததாக கூறியுள்ளார். இதன் பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.