கடந்த 1-ம் தேதி நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள கஞ்சவாலா என்ற பகுதியில் நிர்வாண கோலத்தில் இளம்பெண் ஒருவர் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை பிடித்து காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
தொடர்ந்து அந்த பெண் யார் என்ன என்று விசாரிக்கையில், அவர் பெயர் அஞ்சலி எனவும், வயது 20 எனவும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த விபத்து சுல்தான்பூரி என்ற இடத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனவும், சுமார் 12- 14 கி.மீ வரை அந்த பெண் காரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அஞ்சலியுடன் அவரது தோழி இருந்ததை கண்டறிந்தனர். மேலும் அஞ்சலி காரில் இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்தும் வலுத்த கண்டங்கள் வெளியான நிலையில் இந்த வழக்கில் காவல்துறை முனைப்பு காட்டி வருகின்றனர். அதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்னர் காரில் இருந்த 5 பேரை போலிஸார் கைது செய்த நிலையில், தற்போது அதில் மிகப்பெரிய ஏமாற்று ஒன்று நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது விபத்து நடந்தபோது கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட தீபக் காரிலேயே இல்லை என்பதும் அவர் தனது வீட்டில் அப்போது இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையில் வெளியான தகவலின் படி, விபத்து நடந்தபோது காரை அமித் என்பவர் ஓட்டி வந்த நிலையில், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்துள்ளது.
மேலும், அங்கிருந்தவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அவரது நண்பரான தீபக் என்பவரை கார் ஓட்டியதாக பொய் சொலக்கூறியதும், அதற்கு தீபக் ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது. முதலில் தீபக்கின் மொபைல் அழைப்புகளை சோதனை செய்தபோது சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து 11 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் நேர்ந்த நேரத்தில் அந்த சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 காவல்துறை அதிகாரிகளை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு ஆணையர் ஷாலினி சிங் தலைமையிலான விசாரணைக் குழு, விபத்து தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதனை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 11 காவல்துறை அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்ததால் இடைநீக்கம் செய்யுமாறு உள்துறை அமைச்சகம் (MHA) டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன் படி அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.