இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து காந்தி நகர் - மும்பை, சென்னை - மைசூர் வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில்கள் தொடர்ச்சியாகக் கால்நடைகள் மோதி விபத்துக்குள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி பகுதி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால் இந்த ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல் எறிந்து தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் திருணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளனர் என மேற்கு வங்க அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் உதயான் குஹா. இவர் கூச் பெஹர் பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு வந்தே பாரத் என பெயர் வைத்து அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர். இது அதிவேக ரயிலாக இருந்தால், ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரிக்கு செல்ல ஏன் 8 மணிநேரம் ஆகிறது. பிற ரயில்களும் இதே நேரத்தில் தானே அங்கு செல்கிறது” என விமர்சித்துள்ளார்.