மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் ( வயது 35). பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்மீது கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. அந்த புகாரில் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று கந்து அடைத்து வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அவரின் கூட்டாளியிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.
மேலும், அவரின் கூட்டாளியும் தன்னை 6 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தனது புகாரில் அந்த பெண் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் கந்துவும் அவரின் கூட்டாளி பர்னு அம்லியரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த பாலியல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கந்துவையும் அவரின் கூட்டாளியையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதனைத் தொடர்ந்து 666 நாட்கள் சிறைக்கு பின் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலி வழக்கில் தன்னை சுமார் 2 வருடம் சிறையில் அடைந்துவைத்தற்கு நிவாரணமாக மாநில அரசு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் போலி வழக்கால் 666 நாட்கள் சிறை சென்றதால் 'மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததாகவும், தான் இல்லாமல் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தொழில் மற்றும் வேலை இழப்பு, நற்பெயர் இழப்பு, உடல் மற்றும் மனம் சார்ந்த வலி, குடும்ப வாழ்க்கை இழப்பு, கல்வி வாய்ப்பு இழப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் இழப்பு ஆகிய காரணங்களால் தனக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.