உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பது காரணங்களுக்காக சோதனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் அதற்கு என்று பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பெண் பயணிகளுக்கு பெண்களே சோதனை செய்யவேண்டும், ஆடைகளை கழற்ற சொல்ல கூடாது போன்ற முறைகள் நடைமுறையில் உள்ளன.
இந்த நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது சட்டையை கழற்ற சொன்னதாக பெண் இசைக்கலைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களுருவில் விமான நிலையம் அமைந்துள்ளார்.
இங்கு வந்த பெண் பயணி ஒருவரை விமான நிலைய சிஐஎஸ்எஃப் ஊழியர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் உடையை கழட்ட கூறியதாகவும், அங்கு உள்ளாடைகளுடன் அந்த பெண் சோதனை செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகாரை அந்த பெண் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியுள்ளது.
"பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது எனது சட்டையை கழற்றச் சொன்னார்கள். பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வெறும் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்ததும் உண்மையில் அவமானகரமானது.ஒரு பெண்ணாக இம்மாதிரியான அனுபவத்தை பெறக் கூடாது. ஒரு பெண்ணிடம் ஆடையை கழற்ற சொல்வதன் அவசியம் எங்கிருந்து வந்தது?" என அந்த பெண் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் விமான நிலைய நிர்வாகத்தை கண்டித்த நிலையில், இன்று காலை அந்த ட்விட்டர் பக்கம் செயலிழந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு விமான நிலைய நிர்வாகம், " இப்படி நடந்திருக்கக் கூடாது. உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த சம்பவம் குறித்து நாங்கள் எங்கள் செயல்பாட்டுக் குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளோம்.பெங்களூரு விமான நிலையத்தின் சோதனை கட்டுப்பாடு எங்களிடம் இல்லை. ஒன்றிய அரசின் சிஐஎஸ்எஃப் தான் அதை நிர்வகித்து வருகிறது. நாங்களும் ஓரளவுக்கு மட்டுமே ஆதரவு தர முடியும்" என்று கூறியுள்ளது.