மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் ஜாதவ். விவசாயிகளுக்கு 'கர்மவீர் தாதாசாஹேப் கெய்க்வாட் சப்லிகரன் ஸ்வாபிமான் திட்டத்தின்' இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்ததன் பேரில் இவருக்கும் நிலம் வழங்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.
இந்த நிலத்தை பெறுவதற்காக விவசாயியான சுனில் ஜாதவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதற்காக பல்வேறு அரசு அதிகாரிகளை தொடர்ந்து அவர் சந்தித்து வந்தாலும், அவரை அதிகாரிகள் தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை அவர் நிலத்துக்காக முயன்ற நிலையிலும் அவருக்கு நிலம் கிடைக்காத நிலையில் சுனில் ஜாதவ் கடும் விரக்தி அடைந்துள்ளார். இந்த நிலையில், நிலத்துக்காக அவர் கையிலெடுத்துள்ள வித்தியாசமான போராட்டம் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி தனது கிராமத்தில் குழி தோண்டிய அவர் அதில் தனது கழுத்து வரை மண்ணுக்குள் புதையுமாறு நின்று குழியை மூடி நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளார். இவரின் இந்த போராட்டம் குறித்த செய்தி பரவியதும் போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
எனினும், தனது நிலம் குறித்த பட்டா தனக்கு வந்தால் மட்டுமே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று விவசாயி சுனில் ஜாதவ் உறுதிப்பட கூறியுள்ளார். இந்த போராட்டத்துக்கு அவரின் குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.