ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அதிலும் தாலிபானின் பாகிஸ்தான் பிரிவாக உருவாகியுள்ள டிடிபி அமைப்பு பாகிஸ்தானில் பல்வேறு பயங்கர தாக்குதல்களை நடத்திவருகிறது. இதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டத்தில் டிடிபி அமைப்புக்கு உரிய பதிலடி கொடுக்கவேண்டும் என்றும், அந்த அமைப்பை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாலிபான் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் அகமது யாசிர் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் பதிவில், "பாகிஸ்தான் அமைச்சரே ! எங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த நினைக்காதீர். நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டு போரில் இந்திய ராணுவத்திடம் சரணடைந்த அவமானமான சூழல் மீண்டும் ஏற்படும்'' என கூறியதோடு அதில் 1971-ம் ஆண்டு நடத்த இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திடம் சரணடைந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
கடந்த 1971-ம் ஆண்டில் வங்கதேச விடுதலைக்காக நடைபெற்ற போரில் இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வங்கதேசத்தின் டாக்காவில் பாகிஸ்தான் ராணுவத்தின் சுமார் 93,000 வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இதனைக் குறிப்பிட்டு தாலிபான் அமைப்பினர் பாகிஸ்தானை விமர்சித்துள்ளனர்.