புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணி புரிந்து வருபவர் சுந்தரராமன். இவர் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி அதிகாலை மடுவுபேட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று குடியிருப்புகளுக்கு மத்தியில் மது குடித்துவிட்டு ஆபாசமாகப் பேசிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி சுந்தரராமன் கூறியுள்ளார்.
ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து செல்ல மறுத்து சுந்தரராமனிடம் தகராறு செய்துள்ளது. அப்போது திடீரென அவர்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலால் அவரது மண்டையில் அடித்துள்ளனர். பிறகு அவரை சரமாரியாக அந்த கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுந்தரராமனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் காவலர் சுந்தரராமனுக்கு தலை, முகத்தில் பலத்த காயங்களுடன் 18 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை, அகஸ்தி, இவர்களது நண்பர்கள் தீனா, வேலு உள்ளிட்ட 8 பேர் சேர்ந்துதான் காவலர் சுந்தர்ராமன்மீது மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அகஸ்தி, தீனா ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அண்ணாமலை, வேலு உள்ளிட்ட ஆறு பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது பா.ஜ.க-வினர் குடிபோதையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.