பெங்கரூரில் பிரிசிடன்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லயஸ்மிதா என்ற மாணவி பி டெக் படித்து வந்தார். இந்நிலையில் மாணவியைப் பார்ப்பதற்காக நேற்று மதியம் அவரின் கல்லூரிக்குப் பவன் கல்யாண் என்ற வாலிபர் வந்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு திடீரென்று பவன் கல்யாண் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து மாணவியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். பின்பு அதே இடத்தில் தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனே கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்லூரியின் காவலாளிகள் இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் பவன் கல்யாண் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கல்லூரி மாணவியும், அவரை கத்தியால் குத்திய வாலிபரும் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவருக்கும் பல வருடங்களாகப் பழக்கம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்களா? என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் பெண் மாணவியை வேறு மாணவன் பட்டப் பகலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்பு சரமாரியாகக் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.