கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள கடுசிவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ். விவசாயியான இவரது தோட்டத்தில் ஒரு தம்பதி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிக் (16), ஷாமா (7) ஆகிய சிறுவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் தம்பதிகள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சிறுவர்கள் சாதிக்கும், ஷாமாவும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பின்னர் இருவரும் அங்கிருந்த பண்ணை வீட்டிற்குச் சென்றனர். அங்குச் சுவரில் தொங்க விடப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அண்ணன் சாதிக்கின் கை எதிர்பாராதவிதமாக ட்ரிகரை அழுத்தி உள்ளது. இதனால் அதிலிருந்து வெளிவந்த குண்டு தம்பி ஷாமா மீது பாய்ந்தது. இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து ஷாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
பிறகு துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த பெற்றோர் மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்ததைக் கண்டு கதறி அழுதனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் சிறுவன் ஷாமா உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த மல்லேஷ் மீதும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
விளையாடும் போது அண்ணன் தவறுதலாகத் துப்பாக்கியில் சுட்டதில் தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.