கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த நெரலூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தனது பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக ரமேஷின் தாய் பர்வதம்மா கடந்த வாரம் துமகூரு மாவட்டம் சிரா நகரிலிருந்து பெங்களூருவிற்கு வந்துள்ளார்.
பின்னர் சில நாட்கள் மகன், மருமகன், பேரப்பிள்ளைகள் என அனைவரிடத்திலும் மகிழ்ச்சியாக பார்வதம்மா கழித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருத்து மூதாட்டியை காணவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் மூதாட்டி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் மூதாட்டி காணாமல் போன அதே நாளில் ரமேஷ் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பாவல் கான் என்ற பெண்ணும் காணாமல் தலைமறைவாக இருந்தது போலிஸாருக்கு தெரியவந்தது. அதேபோல் இவர் ரமேஷ் குடியிருக்கும் வீட்டின் மூன்றாவது மாடியில் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டிலிருந்த கப்போர்டில் அழுகிய வாடை வந்துள்ளது. பிறகு போலிஸார் கபோர்டை திறந்து பார்த்தபோது அதில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சுமார் 4 லட்சம் மதிப்பில் மூதாட்டி அணிந்திருந்த நகைகள் மாயமானதும் தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி பார்வதம்மாவைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொடூரமாகக் கொலை செய்து விட்டு நகைகளை எடுத்துக் கொண்ட தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பாவல்கான் என்ற பெண்ணை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நகைக்காக 80 வயது மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.