கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
திட்டமிட்டபடி ராகுல் காந்தியின் நடைபயணம் வெற்றிகரமான நடைபெற்று வருகிறது. இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தியைக் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரை என பலரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.
இந்த நடைபயணத்தின் போது ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களை அம்பலப்படுத்தி வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் நடைபெற்ற நடைபயணத்தின் போது ராகுல் காந்தியைப் பார்த்து பா.ஜ.க தொண்டர்கள் மோடி.. மோடி.. மோடி.. என முழக்கமிட்டனர்.
அப்போது, தனது முகத்தில் எந்த கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தாத ராகுல் காந்தி அவர்களைப் பார்த்து புன்னகையுடன் ஃப்ளையிங் கிஸ் கொடுத்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.