பீகார் மாநிலம் பங்கா மாவட்டம் கச்சாரி பிப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர் விடுப்பு கேட்டு தனது பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவரின் கடிதத்தில், என் அம்மா டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இறந்துவிடுவார் என்பதால் அவரின் இறுதிச் சடங்குகளுக்காக டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7-தேதி வரை விடுப்பு எடுக்கவுள்ளேன் என்றும், மேலும், தயவு செய்து எனது விடுப்புக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல பீகாரில் மற்றொரு ஆசிரியர் நீரஜ்குமார் என்பவர் தான் பணிபுரியும் பள்ளியின் தலைமையாசிரியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், டிசம்பர் 7-ம் தேதி திருமண விழா நடைபெறவுள்ளது. அதில் நான் கலந்துகொண்டு அங்கு கொடுக்கும் சாப்பாட்டை நன்றாக உண்ணவுள்ளேன். அதனால் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் எனக்கு 3 நாட்கள் விடுப்பு தரவேண்டும் என்று எழுதியுள்ளார்.
தற்போதைய காலத்தில் மாணவர்கள் கூட முறையான காரணத்தை கூறி விடுப்பு எடுத்துவரும் நிலையில், பள்ளி ஆசிரியர்களின் இதுபோன்ற கடிதம் பீகாரின் அவலநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த கடிதங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது நிலையில், பலரும் அந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
பீகாரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்புக்கான விண்ணப்பங்களை மூன்று நாட்களுக்கு முன்பே தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்டக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுபோன்ற கடிதங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.