இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக NDTV இருந்து வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு NDTV நிறுவனத்தின் சில பங்குகளை பிரபல தொழிலதிபரான அதானி குழுமம் வாங்கியது. இதனால் முதல் முறையாக அதானி குழுமம் ஊடகத்துறையில் கால் பதித்துள்ளது.
மேலும், அரசியல் செய்திகளை மிகவும் தெளிவுடன் வெளியிட்டு வந்த NDTV-யின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்து. இந்நிலையில் NDTV-யின் இயக்குநர் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் விலகியுள்ளனர்.
நேற்று NDTV-யின் வாரியக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் இயக்குநர் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் பதவி விலகல் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னியா செங்கல்வராயன் ஆகியோர் நியமனத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.
NDTVயின் 29.18 % பங்குகள் விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோரால் உருவாக்கப்பட்ட RRPR நிறுவனத்துக்குச் சொந்தமானதாக இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த 29.18 % பங்குகளை அடமானமாக வைத்து VCPL நிறுவனத்திடம் இருந்து ரூ.403 கோடி RRPR கடன் வாங்கியது.
இந்த கடனை 10 ஆண்டுகலாக செலுத்தாததை அடுத்து RRPR நிறுவனத்தின் ஒப்புதலை வாங்காமலே 29.18 % பங்கை VCPL நிறுவனம் அதானி குழுமத்திற்கு விற்றுள்ளது. இதன்படிதான் அதானி குழுமம் NDTV நிறுவனத்தின் பங்கை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.