ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேரி என்னும் இடத்தில அரசு பெண்கள் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நடந்துள்ள சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நாய் ஒன்று வாயில் எதையோ வைத்து சுற்றி திரிந்துள்ளது. முதலில் அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், எதேச்சையாக அதனை பார்த்த ஒருவர் நாய் கவ்வியிருப்பது ஒரு சிசுவின் உடல் என்பதை கண்டு அலறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சிலர் அதனை பார்த்து நாயை விரட்டி சென்றுள்ளனர். ஆனால் நாய் விடாமல் ஓட ஒருகட்டத்தில் வாயில் கவ்வியிருந்த சிசுவை கட்டிடத்தின் வாசலில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அதனை பார்த்தபோது சிசுவின் சடலம் என்பது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு வந்த ஊழியர்கள் கருவை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அது 8 மாத ஆண் குழந்தையின் சடலம் என்று தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
போலிஸாரின் விசாரணையில் அந்த பகுதியில் சிசிடிவி காட்சிகள் ஏதும் இல்லாத நிலையில், அது யாரின் குழந்தை என்பது கண்டறியமுடியவில்லை. இது தொடர்பாக வெளியான தகவலின்படி ஒருவேளை குழந்தை மருத்துவமனையில் இறந்த நிலையில், குடும்பத்தினர் பக்கத்தில் எங்காவது மண்ணில் புதைத்திருக்கலாம் அதை நாய் தோண்டி எடுத்திருக்கலாம் என போலிஸார் கூறியுள்ளனர்.