கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் சென்ற பயணியின் பையிலிருந்த பார்சல் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே புகைமண்டலமாக மாறியது இருப்பினும் ஆட்டோ ஓட்டுநரும் ஆட்டோவில் சென்ற பயணியும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோவில் வெடிமருந்து இருந்ததா என்ன என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்களூர் மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலிஸார் அந்க் பகுதியில் விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் மாநில போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக டி.ஜி.பி பிரவீன் சூட் தெரிவித்தார். மேலும் முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் சென்ற பயணி கொண்டு வந்த குக்கர் பார்சலுக்குள் வெடிகுண்டுகள் இருந்தது உறுதியாகி உள்ளது.
அதுமட்டுமல்லது, தடையவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள் பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆட்டோவில் பயணித்த பயணி தன் அடையாளங்களை மறைத்துள்ளார். தன் பெயர் பிரேம் ராஜ் என்று கூறினாலும், அடையாள அட்டையில் வேறு பெயராக உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் வெடி விபத்தில் சிக்கிய ஆட்டோவில் சோதனை செய்ததில், நட் போல்ட் மற்றும் பேட்டரி இருந்தது. சுற்று வகை வயரிங் மூலம் பொருட்கள் இருந்தன, சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடித்ததாக போலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தும் என தெரிகிறது. இதுதொடர்பாக மங்களூரு போலிஸ் கமிஷனர் சஷிகுமார் கூறுகையில், ஆட்டோவில் பயணி ஏறிய பிறகு வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது” என்றார். இந்த விசாரணைக்கிடையில், இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் தற்செயலானது இல்லை. திட்டமிட்ட சதி. கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டப்பட்ட தீவிரவாத செயல் என அம்மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.