தனது தந்தையின் உயிரைக்காப்பற்ற கல்லீரல் தானம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும் என கேரள நீதிமன்றத்தை நாடிய சிறுமியின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்த 48 வயதுமிக்க நபர் ஒருவர் அந்த பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 17 வயதுடைய மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு அண்மைக்காலமாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்போது இவருக்கு கல்லீரலின் பிரச்னை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இவரது உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கல்லீரல் தானம் குறித்து வெளியில் விசாரித்தனர். அதோடு மருத்துவமனை நிர்வாகமும் விசாரித்தது. ஆனால் கல்லீரல் தானமாக கிடைக்கவில்லை.
எனவே தனது தந்தை உயிர் பிழைக்க வேண்டுமென மகளே தனது உடலில் உள்ள ஒரு கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்துள்ளார். இது குறித்து மருத்துவரிடமும் தெரிவித்தார். பொதுவாக இந்தியாவில் மனித உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று சட்டம் 2014-ன் படி தானம் செய்பவருக்கு 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். ஆனால் இந்த சிறுமிக்கோ 17 வயது தான் ஆகிறது. எனவே தானம் செய்ய முடியாது என்று மருத்துவர் மறுத்துள்ளார்.
இருப்பினும் தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த மகள், உடல் உறுப்பு தானம் சட்டத்தில் இருந்து விலக்கு கோரி, கேரளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‛‛எனது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. நான் கல்லீரல் தானத்தை செய்ய தயாராக உள்ளேன். எனக்கு உறுப்பு தானம் செய்வதில் மருத்துவத் தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும் உறுப்பு மற்றும் திசு மாற்று விதிகள் 2014 விதி 18-ன் படி தானம் செய்பவரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
ஆனால் எனக்கு தற்போது 17 வயது ஆகிறது. நான் எனது தந்தைக்கு எனது கல்லீரலை தானம் செய்ய தயாராக இருக்கிறேன். எனவே எனது தந்தையின் உயிர் மீது கவனம் கொண்டு 2014 விதி 18 ல் வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு நேற்று நீதிபதி விஜி அருண் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிஆர் ஷாஜி வாதாடினர். பின்னர் வாதங்களை கேட்ட நீதிபதி மாநில சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களை பெற்று அதன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வு தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.