உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கூட மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.
இதனால் பிரபலமான நிறுவனங்களும் மின்சார பைக், கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் ஓலா நிறுவனம் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளராக திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை வாங்க பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், மக்களின் இந்த ஆசையை புரிந்துகொண்ட ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக இணையத்தளத்துக்கு சென்று ஓலா நிறுவனத்தின் பெயரில் இருந்த தளத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் பதிவுசெய்து, அதற்கான பணமும் கட்டியுள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட நாளில் ஸ்கூட்டர் வந்துசேராத நிலையில் நிறுவனத்தில் இருந்து முறையான பதிலும் கிடைக்கவில்லை. இதனால் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலிஸார் அவர் ஸ்கூட்டர் முன்பதிவு செய்து பணம் கட்டியது தவறான இணையதளம் என்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அந்த இணையதளத்தை வைத்து விசாரித்ததில் அந்த கும்பலை சேர்ந்த 20 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும், இதற்காக அவர்கள் தனி கால் சென்டரே நடத்தி வந்ததும் தெரியவந்தது. அதோடு இந்த கும்பலிடம் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.