உத்த பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் நாட்டிலேயே பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலமாகவும் உத்தரப் பிரதேசம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், மக்களுக்காக அமல்படுத்தப்படும் திட்டங்கள் பலவேற்றிலும் ஊழல் நடப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் கூட காவல்துறையினருக்குத் தரமற்ற உணவு வழங்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
அதேபோல் பள்ளியில் மாணவர்களுக்கு வெறும் ரொட்டி மட்டுமே வழங்கப்பட்ட படம் மற்றும் வீடியோவும் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காரணங்களால்தான் அரசு வழங்கும் திட்டங்களில் ஊழல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிலிபிட் மாவட்டத்தில் பூரன்புர் - பக்வந்த்பூர் கிராமங்களை இணைக்கும் விதமாக அண்மையில் ரூ.3.8 கோடி மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமற்று அமைக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இளைஞர் ஒருவர் தார்ச்சாலையை வெறும் கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையடுத்து இந்த தார்ச்சாலை அமைப்பதில் பெரிய ஊழல் நடந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் எந்த அளவிற்கு ஊழல் பரந்து பிரிந்து கிடக்கிறது என்பதற்கு இதுதான் உதாரணம் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.