கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வேன் ஒன்று சிக்கி நசுங்கியதால் இடுக்கி பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் பருவமழை பெய்து வரும் நிலையில் தென் பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளா மாநிலத்திலும் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள இடுக்கி பகுதியில், நேற்று கனமழை விடாமல் பெய்துள்ளது. அப்போது மலைப்பகுதிகளில் இருக்கும் குண்டளை எஸ்டேட் புதுக்கடி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வெள்ளம் தேங்கி சாலைகளையே மூழ்கடித்துள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியை ஒட்டியுள்ள மூணாறு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க சுற்றூலா பயணிகள் குவிந்துள்ளனர். அதில் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று கோழிக்கோடைச் சேர்ந்த சுற்றுலா வந்த பயணிகள் மூணாறு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள்ஒரு வேனில் வந்தபோது, அதன் ஓட்டுநர் எதையோ உணர்ந்துள்ளார். பின்னர் பயந்து அனைவரையும் வேனை விட்டு இறங்க சொல்லி அவரும் இறங்கியுள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் உட்பட 11 பேர் வேனை விட்டு இறங்கி தள்ளி சென்று நின்றுள்ளனர். இருப்பினும் வேனில் பயணித்த நபர் ஒருவர் தனது செல்போனை எடுக்க மீண்டும் வேனுக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்ப்பாரா விதமாக வந்த காற்றாற்று வெள்ளம் சிறிது நேரத்திலேயே வேனை சுமார் 1 கி.மீ., வரை அடித்து கொண்டு சென்று விட்டது. மேலும் மொபைல் போனை எடுக்க வேனுக்கு சென்ற நபரும் மாயமானார்.
இதையடுத்து இதுகுறித்து மீட்பு குழுவினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் காணாமல் போன நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதி மிகவும் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவர்த்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.