ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் நேற்று மோதின. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் அடிலைட்டில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர்வந்த இந்திய அணியின் நாயகம் சூர்யகுமாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். பின்னர் கோலி அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்தார். அரைசதமடித்த கையோடு கோலி ஆட்டமிழக்க இறுதியில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் 10 ஓவரில் தடுமாறிய இந்திய அணி அடுத்த 10 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ்,பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் குவித்தது. அதன்பின்னும் அபாரமாக ஆடிய இந்த ஜோடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்காண காரணங்கள் குறித்து பலரும் சமூகவலைதளத்தில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றிக்காக இந்திய அணி போராடவே இல்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் ட்விட் வைரலாகி வருகிறது.
இது குறித்து சசிதரூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இந்திய அணி தோல்வி அடைந்ததை நான் பொருட்படுத்தவில்லை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி. ஆனால் இந்திய அணி வெற்றிக்காக போராடமால் எளிதில் வீழ்ந்ததை நான் பொருட்படுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.