மத்திய பிரதேச மாநிலம் ரோவாவில் நீர் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ஜனார்தன் மிஸ்ரா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ஜனார்தன் மிஸ்ரா, :மண்ணுக்கு அடியில் தண்ணீர் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நாம் சேமிக்கும் தண்ணீரை விட அதிகமாகப் பயன்படுத்துகிறோம். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீரைச் சேமிப்பதற்கு நாம் பணம் செலுத்தும் போதுதான் அதன் மதிப்பு நமக்கு புரியும்.
உங்களுக்கு விருப்பமான எதற்கும் பணத்தைச் செலவு செய்யுங்கள். நீங்கள் குட்கா உட்கொள்ளுங்கள், மது அருந்துங்கள், சுலிசன் எனும் ரசாயனத்தைக் கூட உட்கொள்ளுங்கள். தனிப்பட்ட விஷயங்களுக்காகவோ அல்லது மத பயன்பாட்டிற்காகவோ எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுங்கள். ஆனால், தண்ணீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இப்படி மதுவைக் குடிக்க ஊக்குவித்து பேசும் பேச்சு இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனார்தன் மிஸ்ராவின் இந்த அலட்சிய பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவர் இப்படி சர்ச்சையாகப் பேசுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு ரூ.15 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்தால்தான் குற்றம் என ஜனார்தன் மிஸ்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.