பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே அண்மையில் குப்பைத் தொட்டியிலிருந்து உடைந்த சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அம்மாநில சிவசனோ கட்சியின் மூத்தத் தலைவர் சுதிர் சூரி தலைமையில் கோவிலுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சுதிர் சூரி உள்ளிட்ட சிலர் போலிஸாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் துப்பாச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் சுதிர் சூரி மீது குண்டடிபட்டுள்ளது. உடனே போலிஸார் அந்த மர்ம நபரைப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டால் படுகாயம் அடைந்த சுதிர் சூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக சுதிர் சூரி சீக்கிய அமைப்புகள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து மதக்கலவரம் எதுவும் ஏற்படாமல் இருக்க மதவாத அமைப்புகள் அமைதிக்காக வேண்டும் என போலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பஞ்சாபில் கடந்த ஜூலை மாதம் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது சிவசேனா கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுபோன்று 8 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.