குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 31ம் தேதி இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தைத் திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்திற்கு விபத்துக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் ஏன் பதவி விலகவில்லை என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," மோர்பி பாலத்தைப் புனரமைத்த ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன் FIR-ல் இடம் பெறவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஏன் பதவி விலகவில்லை?
விபத்து குறித்து கேள்வி எழுப்பினால் அது சோகத்தை அதிகரிப்பதாக அர்த்தமா? ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்? விபத்து நடந்து 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இந்த கேள்விக்கு பா.ஜ.கவும், குஜராத் மாநில அரசும் இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை?." என தெரிவித்துள்ளார்.