குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மோர்பியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களைப் பார்க்கப் பிரதமர் நரேந்திர மோடி வருகைத்தர உள்ளார். இதனால் மருத்துவமனை முழுவதும் பெயிண்ட் அடித்து, அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் மருத்துவமனையில் வேக வேகமாக நடைபெற்று வரும் பணிகளை புகைப்படத்துடன் வெளியிட்டு விமர்சித்துள்ளது. மேலும், "சோக நிகழ்வு, பிரதமர் மோடி மோர்பியின் உள்ள சிவில் மருத்துவமனைக்கு வருகை தர உள்ளார். அதற்கு முன் பெயிண்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. பளபளக்கும் ஓடுகள் பொருத்தப்படுகின்றன.
பிரதமர் மோடியின் படத்தில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு வெட்கமே இல்லை" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் விமர்சனம் செய்துள்ளது.
141 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து, 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்காக மோர்பி மருத்துவமனை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.