மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்தனர்.
அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலையிலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர், உணவு பொருட்களின் விலையையும் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மோடி அரசின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை வேலையின்மைதான் என ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், உத்தர பிரதேசத்தில் குரூப் சி பணியிடங்களுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
40 ஆயிரம் அக்னி வீரர்கள் பணியிடத்துக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் இளைஞர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்கிறதா?. எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.
மோடி அரசின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்பது வேலையின்மைதான். ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை" என தெரிவித்துள்ளார்.