கடந்த 2018ம் ஆண்டு மும்பையின் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதா ஷர்மா என்பவர் விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னைக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் இருக்கும் இடத்தில் இருந்து விமானநிலையம் 36 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால் Uber app மூலம் கவிதா ஷர்மா டாக்சியை வரவழைத்துள்ளார்.
5.50 மணிக்கு விமானம் புறப்படும் நேரமாக இருந்த நிலையில், சரியாக பிற்பகல் 3.29 மணிக்கு அவர் டாக்சி புக் செய்துள்ளார். ஆனால் டாக்சி ஓட்டுநர் சுமார் 14 நிமிடங்கள் கழித்தே கவிதா சொன்ன இடத்துக்கு வந்துள்ளார். இதனால் ஆரம்பத்திலேயே கவிதாவுக்கு தாமதமாகியுள்ளது.
இது தவிர மாற்றுப்பாதையில் சென்று மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனிடையே காருக்கு கேஸ் (CNG) நிரப்ப வேண்டும் என்று கூறி அதற்கும் சென்று வந்துள்ளார். இதனால் தாமதமாக விமான நிலையம் சென்றுள்ளார். இது போதாது என்று ஆப்பில் காட்டிய 563 ரூபாய் இவர் இறங்கும்போது 703 ரூபாயாக அதிகரித்துள்ளார்.
இது போன்ற காரணங்களால் இவர் செல்லவேண்டிய விமானத்தை தவறவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இவர் இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் பதிலளித்த Uber நிறுவனம் நடந்த சம்பவத்துக்கு டிரைவர்தான் பொறுப்பு என கூறியுள்ளது.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயலியை நிர்வகிப்பதில் Uber நிறுவனத்துக்கே பங்கு இருப்பதால் பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு வழக்கு விசாரணைக்கு ஆன செலவு உட்பட 20,000 ரூபாய் அபராதம் வழங்கும் படி உத்தரவிட்டிருக்கிறது. இந்த சம்பவம் இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.